Skip to content

சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து சாம்பல் – 39 பயணிகள் தப்பினர்

ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை விஜயவாடா அருகே உள்ள காஞ்சிகச்செர்லா அடுத்த கேசரா டோல்கேட் பகுதியில் பேருந்து வந்துகொண்டிருந்தது.

பேருந்து டோல்கேட்டைக் கடந்தபோது, அதன் பின்புறம் உள்ள இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்தார். விபரீதத்தை உணர்ந்த அவர், உடனடியாக பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்துக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகளை “சீக்கிரம் கீழே இறங்குங்கள்” என்று சத்தமிட்டு எச்சரித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த 39 பயணிகளும் அலறியடித்துக்கொண்டு பேருந்தை விட்டு வெளியேறினர். பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே, தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. ஓட்டுநர் சரியான நேரத்தில் புகையை கவனித்து பயணிகளை எச்சரித்ததால், ஒரு பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!