கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள கழிவறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பயந்துபோன அந்தப் பெண், குழந்தையை கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு, எதுவும் தெரியாதது போல் வார்டுக்கு வந்து படுத்துக்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ஊழியர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பகுதி நேர வேலை பார்த்தபோது அங்குள்ள ஒரு புலம்பெயர் தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானது தெரியவந்தது. தனக்கு கர்ப்பம் தரித்த விவரமே தெரியாது என்றும், வயிற்றில் ஏதோ கட்டி இருப்பதாகவே நினைத்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் என குழந்தைகள் நலக்குழுவிடம் அவர் மறுத்துவிட்டார். தற்போது, பெற்ற குழந்தையை வீசியெறிந்த குற்றத்திற்காக அந்த இளம்பெண் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
