Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

குஜராத் : மாநிலம் பாவ்நகர் மாவட்டம், கர்ஜியா கிராமத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், வனவிலங்குகளுடனான மனித மோதலின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது. கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த 55 வயதான காலூபாய் பர்மர் என்பவரைப் பெண் சிங்கம் ஒன்று சுமார் 30 நிமிடங்கள் தனது பிடியில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை தனது பசுக்களுக்கு உணவளித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த சிங்கம் திடீரென காலூபாயைத் தாக்கியது. அவரைத் தரையில் அழுத்திக்கொண்டு, தனது கால்களால் பலமாக மிதித்து, கைகளை வாயால் கவ்வி வைத்திருந்தது. சுமார் அரை மணி நேரம் சிங்கம் அவரை விடுவிக்காமல் வைத்திருந்தது. கிராம மக்கள் கூடி சிங்கத்தை விரட்ட முயன்றும், சிங்கம் அவரை விடவில்லை.

பாலிதானா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலூபாய் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கையில், “அந்த சிங்கம் என்னைத் தாக்கியபோது நான் மிகுந்த அச்சமடைந்தேன். பலமுறை தப்பிக்க முயன்றும் முடியவில்லை. ஒரு கட்டத்தில், நான் மிகுந்த மன உறுதியுடன் சிங்கத்தின் கழுத்துப் பகுதியை மிகவும் மென்மையாக வருடினேன். அந்தத் தொடுதலை உணர்ந்த சிங்கம், திடீரென என் கையை விட்டுவிட்டு, அருகே இருந்த பசுவை நோக்கித் தாவிக் குதித்துச் சென்றது. அதுதான் என்னை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காலூபாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிங்கத்தின் தாக்குதல் நடந்த உடனேயே வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டும், அவர்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து வருவதாகவும், இதைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது அந்தச் சிங்கத்தின் பிடியிலிருந்து காலூபாய் தப்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் பீதியடையாமல் செயல்பட்ட அவரது மன உறுதி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

error: Content is protected !!