கரூரில் கால்நடை மருத்துவமனைகளில் அமைச்சர் கமலி ஆய்வு –தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என பேட்டி.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கொளந்தானூர் பகுதியில் உள்ள கால்நடை பெரு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், வாங்கல் மற்றும் எஸ். வெள்ளாளப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மருத்துவச் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கமலி,
கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 கோழிப் பண்ணைகளில் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டு, அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பண்ணை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும், கால்நடை மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து தெருநாய்கள் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் புதிதாக 38 மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், கூடுதலாக 72 தங்குமிடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவசரகால கால்நடை மருத்துவச் சேவைக்காக தற்போது 245 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 143 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 2,000 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என பதிலளித்தார்.
