தாம்பரத்தில் நள்ளிரவில் சாலை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சரத்குமார்
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் நேரில் சென்று பணிகளை அமைச்சர் சரத்குமார் ஆய்வு செய்தார்.
தாம்பரம் முடிச்சூர் சாலையில் இருந்து திருநீர்மலை செல்லும் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டது.
இதையடுத்து, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் சரத்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இரவு நேரங்களில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் சரத்குமார் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
