தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்த வர்த்தக நிமித்தமாக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவகாசி ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக அங்கு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், தமிழை விட இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழின் எழுத்துக்களை விட இந்தி எழுத்துக்கள் பெரியதாக அமைக்கப்பட்டிருப்பது மறைமுகமான இந்தித் திணிப்பு என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகாசி ரயில் நிலைய பெயர் பலகையில் தமிழை பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் மொழி மற்றும் உணர்வுகளை மதிக்காமல் தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள்! மூத்தவள்! முதன்மையானவள்!” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையங்களில் தொடர்ந்து மொழி விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சரின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

