எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சிஎம் சார் நள்ளிரவில் பெண்களை மேம்பாலத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து: இணையத்தில் வைரலாகும் பெண்ணின் கண்ணீர் வீடியோ
இரவு நேரத்தில் அரசுப் பேருந்து ஊழியர்களின் அத்துமீறல்: முதல்வருக்கு கண்ணீருடன் பெண் வேண்டுகோள்
இரவு நேரத்தில் அரசு பேருந்தில் பயணித்த பெண்களைப் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் ஒரு கிலோமீட்டர் தள்ளி ஆள்நடமாட்டமில்லாத மேம்பாலத்திலேயே ஓட்டுநர் இறக்கிவிட்டுச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது முதல்வர் தான் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் செங்கல்பட்டிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்
செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் தடம் எண் 82C கொண்ட அரசுப் பேருந்தில் இரவு 8:30 மணியளவில் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து இரவு 9:15 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை அடைந்தது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்க வேண்டிய சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து அதிவேகமாக இயக்கியுள்ளார்
பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் வண்டியை நிறுத்துங்க… நிறுத்துங்க… எனச் சத்தமிட்டுக் கத்தியுள்ளனர். இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் பேருந்து நிலையத்தைக் கடந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் மீதே பேருந்தை நிறுத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார்
இரவு நேரத்தில் ஆள்நடமாட்டமற்ற மேம்பாலத்தில் பெண்களையும் குழந்தையையும் இறக்கிவிட்டது குறித்து அந்தப் பெண் ஓட்டுநரிடம் நியாயம் கேட்டுள்ளார் அதற்கு அந்த ஓட்டுநர் சிறிதும் பொறுப்பின்றி பயணிகள் என்றும் பாராமல் மிகவும் அவதூறான வார்த்தைகளால் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது
இந்த மன உலைச்சலையும் அச்சத்தையும் தாங்க முடியாத அந்தப் பெண் உடனடியாகத் தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்
அவர் பேசியதாவது
இரவு நேரத்தில் மேம்பாலத்தில் எங்களை இறக்கிவிட்டால் நாங்கள் எப்படிப் பாதுகாப்பாகச் நடந்து வர முடியும் போக்குவரத்துத் துறையில் ஏன் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது
சிஎம் சார் நீங்கதான் இதற்கு உடனடியாக ஆக்ஷன் எடுக்கணும் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் எங்களுக்கு நடந்தத போன்ற ஒரு பயங்கர அனுபவம் இனி வேறு எந்தப் பெண்ணுக்கும் எந்தக் குடும்பத்திற்கும் நடக்கக் கூடாது என தனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் தற்பொழுது அந்த காட்சி பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
