ஹைதராபாத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியான பிஆர்எஸ்-ஐ (பாரத் ராஷ்டிர சமிதி) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான டி.சுதீர்ரெட்டி சமீபத்தில் கொசுவலையைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட ஆடையை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நகரம் முழுவதும் கொசு பரவலை கட்டுப்படுத்த தவறியதாக ஆளும் காங்கிரஸ் அரசை தாக்கிப் பேசிய அவர், நகரின் ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தபட்சம் 10 கொசுமருந்து அடங்கிய புகை தெளிக்கும் இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தவிர ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை ஆங்காங்கே தெளிப்பது, ஆகாய தாமரைகளை அகற்றுவது உள்ளிட்ட பிற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கொசுக்களின் படையெடுப்பு காரணமாக ஹைதராபாத்தில் நிலவும் மோசமான சூழலை விவரிக்கும் பொருட்டு கவனத்தை ஈர்ப்பதற்கே தாம் கொசுவலையை ஆடையாக அணிந்து பேட்டியளிப்பதன் நோக்கம் என்று பேசும் போது கூறினார். அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு மத்தியில் ஹைதராபாத் நகர் மக்கள் எதிர்கொள்ளும் யதார்த்த அவதியை பிரதிபலிக்கும் வகையிலேயே இப்படி செய்வதாக டி. சுதீர் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
கொசுவலை உடையுடன் சட்டசபை ஊடக அறைக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்த எல்.பி. நகர் தொகுதி எம்எல்ஏ-வானடி.சுதீர்ரெட்டி”நகரம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொசு தொல்லையை கட்டுப்படுத்த முடியாத ஒரு அரசு, தொடர்ந்து பதவியில் நீடிக்கத் தகுதியானதா” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பி, சட்டமன்ற வளாகத்தில் தான் இந்த உடைய அணிய முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தன்னிடம் அராஜகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.
கொசு தொல்லையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படும் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த தனித்துவ உடையை அணிந்ததாகக் கூறிய எம்எல்ஏ ரெட்டி நகர் முழுவதும் கொசு மருந்து தெளித்தல், கம்பூசியா மீன்களை விடுதல் போன்ற பணிகளில் ஊழல் நடப்பதாகவும், இதன் காரணமாகவே நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். ஹைதராபாத் நகருக்கு வருபவர்கள் கொசு தொல்லை காரணமாக அலறி கொண்டு நகரை விட்டு வெளியேறுவதாகவும், இந்த பிரச்சனை நகரின் நற்பெயரை கெடுப்பதாகவும் தெரிவித்தார்.
தங்களது கட்சி ஆட்சியில் இருந்த போது, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் ஐந்து படிநிலைகளைக் கொண்ட அறிவியல் கொசு கட்டுப்பாட்டு முறை செயல்படுத்தப்பட்டு, கொசுக்களின் இனப்பெருக்கம் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகவும் இதனால் மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பரவும் நோய்கள் ஏற்பட வழிவகுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

