மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததோடு, அதற்கு நியாயம் கேட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 8 பேரை சஸ்பெண்ட் செய்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முற்பட்டபோது ஆளும் கட்சியினர் திட்டமிட்டுத் தடுத்து நிறுத்தினர். ஜனநாயக விரோத முறையில் தங்களை பேச விடாமல் தடுப்பது குறித்து சபாநாயகரிடம் முறையிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாடாளுமன்றத்திற்குள்ளேயே எதிர்க்கட்சித் தலைவரின் குரல்வளையை நெறித்து, உறுப்பினர்களின் உரிமைகளைப் பறிப்பது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

