சென்னை நொளம்பூரில் நேற்றிரவு டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 8 பேர் கும்பல் வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தடுத்த, தந்தை, மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் அடுத்த சின்ன நொளம்பூர் யூனியன் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ் (56). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் சரத் (27), சஞ்சய் (24). இருவரும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சில நேரங்களில் இரவு நேரங்களில் டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோன்று நேற்றிரவும் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், குடங்களை எடுத்து வந்து வரிசையாக தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, சரத், சஞ்சய் ஆகியோரும் குடங்களை எடுத்து வந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த உதயா என்பவரும் தண்ணீர் பிடிக்க வந்தார். அப்போது திடீரென தண்ணீர் பிடிப்பதில் சரத், சஞ்சய் மற்றும் உதயாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. சஞ்சய், சரத் ஆகியோர் உதயாவை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் இந்த தாக்குதலில் காயமடைந்த உதயா கடும் ஆத்திரத்தில் இருந்தார். சிறிது நேரம் கழித்து தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கொண்டு சஞ்சய் வீட்டிற்கு சென்றார் உதயா. சிலர், கைகளில் பீர் பாட்டில்கள் வைத்திருந்தனர். 4 பேரின் கைகளில் பட்டாக்கத்தி இருந்தது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக பீர் பாட்டிலால் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதை பார்த்ததும் முருகதாஸ் குடும்பத்தினர் அலறி கூச்சல் போட்டனர். பின்னர், சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரை அந்த கும்பல் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் இருவரும் அலறியடித்து கொண்டு கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டனர்.
அவர்களை அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியது. அதை தடுக்க முயன்ற முருகதாசையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி விட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். சரத், முருகதாஸ் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் முருகதாசுக்கு 38 தையல் போடப்பட்டுள்ளது. அதே போன்று சரத்துக்கு 48 தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசில் செல்வி புகார் செய்தார். கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், நொளம்பூர் இன்ஸ்பெக்டர் அருள் மணிமாறன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விடிய விடிய இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் மதுரவாயல் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, முக்கிய குற்றவாளியான ரூபேஷ் (23) என்பவரை பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் அருள் மணிமாறன், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். இதனால், போலீசார் அதிரடியாக செயல்பட்டு, தற்காப்பு நடவடிக்கையாக, ரூபேசின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும், அவருடன் இருந்த நவீன்குமார் (24), உதயராஜ் (21), சூர்யா (20), கார்த்திக் ராஜா (28), ராகேஷ் ராஜா (26), மேஷாக் (22), சூர்யபிரகாஷ் (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரூபேசை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 7 பேரையும் நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
