திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி (69). இவர் வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் நேற்றிரவு தாமதமானதால் திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி, ஒரு வைரக் கல் கொள்ளைப்போனது தெரியவந்தது.
பீரோவில் மடித்து வைத்திருந்த ரூ.32 ஆயிரம் தப்பியது. இதே கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன் (70) என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், 12 ஆயிரத்தைகொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த பகுதியை சேர்ந்த சிவபுஷணம் (60) என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 8 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர். அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (55), பாஷா உட்பட 3 பேரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் கொள்ளை மற்றும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
