ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதில் உள்ள ‘ரீல்ஸ்’ அம்சம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பயனர்களைக் கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் தனது கமெண்ட் பிரிவில் (Comment Section) ஒரு புதிய அதிரடி அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை பிறரின் பதிவுகளுக்கு எழுத்துக்கள் மற்றும் எமோஜிகள் மூலமாக மட்டுமே கமெண்ட் செய்ய முடிந்த நிலையில், இனி பயனர்கள் தங்களின் கமெண்ட்டுகளுக்குப் பதிலாகப் புகைப்படங்களையும் பதிவிட முடியும். கருத்துக்களை மேலும் சுவாரஸ்யமாகவும், காட்சிப்பூர்வமாகவும் வெளிப்படுத்த உதவும் இந்த புதிய வசதி, தற்போது உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
