விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி (App) அல்லது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து, ஒரு புதிய ஆபத்தான மால்வேர் தாக்குதல் உலக அளவில் பரவி வருகிறது. பிரபல சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனங்களான காஸ்பர்க்ஸி மற்றும் செக்யூர்லிஸ்ட் நடத்திய ஆய்வில் இந்த அச்சுறுத்தல் கண்டறியப்பட்டு, இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தத் தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த மோசடியில் ஹேக்கர்கள் நேரடியாகப் பயனர்களைத் தொடர்பு கொள்ளாமல், முதலில் ஒருவரது வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக ஹேக் செய்து தங்களது கட்டுப்பாட்டில் எடுக்கின்றனர். பின்னர், அவர்களின் கணக்கிலிருந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எண்களுக்குப் போலியான பெயர்களில் தீங்கிழைக்கும் மால்வேர் கோப்புகளை (Files) அனுப்புகின்றனர். நமக்கு நன்கு தெரிந்தவர்களிடம் இருந்து மெசேஜ் வருவதால், பயனர்கள் எந்தச் சந்தேகமும் இன்றி அந்தப் பக்கங்களை அல்லது கோப்புகளைத் திறந்து ஏமாந்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சாதனத்தின் முழு கட்டுப்பாடும் பறிபோவதுடன், கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் தனிப்பட்ட ரகசியத் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
