தஞ்சாவூர் அருகே ஆழ்குழாய் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், காவிரி நீர் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டதால், குறுவை பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்கான அணை இதுவரை திறக்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவை விட கூடுதலாக பெய்து வந்தாலும், பரவலாக அல்லாமல், சில இடங்களில் மட்டுமே பெய்கிறது. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், காவிரி நீரத்து வரத்து இல்லாததால், 1.50 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஆழ்குழாய் மூலமே சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றுப் பாசனத்தைச் சார்ந்த வெள்ளாம்பெரம்பூர், தென் பெரம்பூர், அள்ளூர் அழிசிகுடி, பனவெளி, விட்டலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை பயிரிடப்பட்ட வயல்களில் ஆழ்குழாய் மூலம் பாய்ச்சப்பட்ட தண்ணீர் உவர் நீராக உள்ளது. இதனால், வயல்களில் தண்ணீர் இருந்தாலும், உப்பு மிதப்பதால் நெற் பயிர்கள் காய்ந்து, படிப்படியாக சருகாகி வருகின்றன. ஏறத்தாழ 30 முதல் 45 நாள்களுக்கு உள்பட்ட குறுவை பயிர்கள் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி நீர் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததாலும், நிலத்தடி நீரின் தன்மை மாறி உவர் நீராக வருகிறது.
இந்தக் கிராமங்களில் இதுவரை ஏறத்தாழ 25 சதவீதப் பரப்பில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலங்கிலும் பருவ மழை போதுமான அளவுக்கு பெய்யாவிட்டால், பாதிப்பு விகிதம் 50 , 60 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதனால், இந்த வயல்களில் கதிர் வந்தாலும், அவையெல்லாம் பதராகத்தான் இருக்கும். மேலும், ஒரு கொத்தில் 300 நெல் மணிகள் வர வேண்டிய நிலையில், ஏறத்தாழ 60 நெல் மணிகள்தான் வரும். இதை அறுவடை செய்தால், இயந்திர வாடகைக்கு கொடுக்கக்கூட போதுமானதாக இருக்காது. அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
