கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானாலும் வங்கிகள் அபராதம் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 3 நாட்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும். இந்த 3 நாட்களுக்குள் தொகையை செலுத்தினால், கூடுதல் அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, அபராத கட்டணத்தை கணக்கிடும் முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த நிலுவை தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளர் ஒரு பகுதியை செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவை தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதேநேரம், இந்த 3 நாள் அவகாசம் என்பது அபராதம் மற்றும் கடன் தகுதி பாதிப்பில் இருந்து மட்டுமே வாடிக்கையாளர்களை காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதிக்கு அடுத்த நாள் முதல் நிலுவை தொகைக்கான வழக்கமான வட்டி கணக்கிடப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் நிதி ஒழுக்கத்தை பேணுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
