குமரியில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தையில் ஒரே நாளில் 1,000 டன் பூக்கள் விற்று தீர்ந்துள்ளது. நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது.
பொதுவாக தோவாளை பூ மார்க்கெட்டில் பல விதமான பூக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவியும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பூக்களை வாங்கி இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.தோவாளை மலர் சந்தையிலிருந்து பூக்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளத்திற்கும் கூட விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து பேசிய பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் அத்தப்பூ கோலத்துக்கான தேவைகள் காரணமாக மலர் விற்பனை அதிகரித்து உள்ளதாக கூறினர். மேலும் ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கிரேந்தி, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட கலர் பூக்கள் சுமார் 1,000 டன் அளவு வந்து குவிந்ததாகவும், இவை அனைத்தும் நேற்று இரவு வரை ஒரே நாளில் விற்று தீர்ந்து விட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
