திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கில்

தலைமறைவாக இருந்த சேதுபதி என்பவரை சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.4 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சந்தை மதிப்புடையதாகும். இந்நிலத்தை போலி அறக்கட்டளை ஆவணங்களை உருவாக்கி, வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாகப் பழனி கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தைக் கிரையம் பெற்ற வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் அடிவாரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி எஸ்பி மற்றும் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படைப் போலீசார் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். போலி பத்திரப்பதிவு மூலம் நிலத்தைக் கிரையம் பெற்ற முக்கிய நபரான சேதுபதியைத் தேடி வந்த காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் அவரை தற்போது கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேதுபதியும் சிக்கியுள்ளார். 4 பேர் மீதும் சட்டத்தின் 5 பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
