Skip to content

தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், கருமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறைப் பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 5 பேரை ஏற்றிக்கொண்டு தேரிருவேலி வழியாக கீழக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பேருந்து உத்தரகோசமங்கை சாலையில் வந்தபோது, எதிரே நெடியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து, மருதுபாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மிகப்பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மருதுபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த பண்ணைக் குட்டைக்குள் பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் உள்ளே இருந்த 5 மாணவிகளும் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழத்தூவல் போலீசார், காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காகப் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான மருதுபாண்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் ராஜாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!