தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு வழங்கிய ஏராளமான நிதியை திமுக தலைமையிலான மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனவும், வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கப்படுவார், அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகும் என குறிப்பிட்டார்.
மேலும் திமுக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்வதாகவும், திமுக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
டாஸ்மாக் முறைகேடு, அரசு வேலைக்கு பணம் என தமிழ்நாட்டின் கடந்த கால அம்மா ஆட்சியின் பெருமையை திமுக ஆட்சியில் மாநிலம் இழந்து வருவதாகவும், திமுக அரசு ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
கோயம்புத்தூர் மக்கள் திமுக அரசு தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை தெரிந்துள்ளதாகவும், கோவையில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், சரியான குடிநீர் விநியோகம் இல்லை எனவும், கௌசிகா நதி புனரமைக்கப்படவில்லை எனவும், ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படவில்லை, உக்கடம் குளம் மேம்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது, வெள்ளை பாதிப்புக்கு உள்ளான தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என மாவட்டம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டார்.
திமுக கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும், தமிழகத்தின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நிதிகளை வழங்கியபோதும் அதனை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு திமுக அரசு பயன்படுத்தாமல் அதிலும் முறைகேடுகள் செய்து வருவதாக விமர்சித்தார்.
தமிழக மக்கள் மீதும் தமிழக கலாச்சாரம் மீதும் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை இல்லை என கூறியவர், தேர்தல் பிரச்சாரங்களில் உதயநிதி பேசும் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும் தமிழக மக்கள் உதயநிதியை மாநிலத்தின் முதல்வராக ஆக்க விடக்கூடாது எனவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உதயநிதி முதல்வராக்கப்படுவார் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சிக்கு உறுதி அளித்துள்ளதாகவும், செந்தில் பாலாஜி உட்பட திமுகவின் ஊழல் அமைச்சர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள், இரண்டு காவல் நிலைய மரணங்கள், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்திலேயே தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அச்சுறுத்தல் என சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும்,
மத்திய அரசின் ஏழைகளுக்கான இலவச வீடு திட்டம் உட்பட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களையும் திமுக அரசு தமிழகத்தில் அமல்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வருவதாக கூறினார்.
கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை உரிய தகவல்களோடு மெட்ரோ திட்டத்தை திருத்தி அனுப்புமாறு மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வந்தே பாரத், ரயில் நிலைய விரிவாக்கம் என பல திட்டங்களை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் எனும் திமுகவினரின் கருத்துக்கு பதில் அளித்தவர், நாட்டை இவ்வாறு இரண்டாக பிரித்துப் பார்க்கும் பார்வை தங்களுக்கு இல்லை எனவும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு மூன்றில் ஒரு பங்கு பதவிகளில் மகளிர் இருப்பார்கள் எனவும், இது அவர்களுக்கான உரிய அங்கீகாரமாக இருக்கும் எனவும், இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும், பொய்யான கருத்துக்களை பரப்பக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக தொடர்ந்து தொழில்துறையினரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும், தொழில்துறையினருக்கான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உதவிகள் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு திமுக மற்றும் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
