இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ₹3,300 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிப்புகளை அசெம்பிள் செய்தல், சோதனை செய்தல் மற்றும் பேக்கேஜிங் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செமிகண்டக்டர் சிப்புகளுக்காக இந்தியா முழுமையாக இறக்குமதியையே நம்பியிருந்தது. ஆனால், தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம், உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த புதிய ஆலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கெய்ன்ஸ் செமிகான் ஆலை ஒரு நாளைக்கு சுமார் 6.33 மில்லியன்சிப்புகளை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான திறன் கொண்டது. இவை குறிப்பாக பின்வரும் துறைகளுக்குப் பயன்படுத்தப்படும்:
- வாகனத்துறை: எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் நவீன கார்களில் பயன்படுத்தப்படும் ‘இண்டெலிஜென்ட் பவர் மாட்யூல்’ (IPM) சிப்புகள்.
- தொழில்துறை: தொழிற்சாலை இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் சென்சார்கள் மற்றும் சிப்புகள்.
- நுகர்வோர்எலக்ட்ரானிக்ஸ்: செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான மின்னணு பாகங்கள்.

