சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்த கும்பல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு சுமார் 35-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அங்கு வந்தவர்களிடம், “25 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ் முறையில் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம். நீங்கள் கட்டும் பணம் விமானச் செலவிற்கு மட்டுமே, அங்குத் தங்குமிடம் மற்றும் உணவு அனைத்தும் இலவசம்” என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிச் சிலர் பணத்தையும் கட்டியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஒரு தனியார் பள்ளி மேலாளர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதேபோல் வேறொரு கும்பலிடம் 1.50 லட்சம் ரூபாய் கட்டி ஏமாந்ததைக்கூறி, இவர்களிடமும் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சந்தேகமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து தப்ப முயன்றனர். உடனடியாகத் தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீசார், சண்முகம் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவைச் சுற்றி வளைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் திட்டமிட்டுப் புதிய வாகன உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சண்முகம், பார்த்திபன், பவராஜ், மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது குழுவில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், இதுவரை எவ்வளவு பணம் ஏமாற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

