வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் டாக்காவின் தேஜ்துரி பஜார் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியளவில், வங்காளதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவரான அஜிஜூர் ரகுமான் முசாபீர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நடந்த இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த மற்றொரு நபரும் படுகாயமடைந்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கிளர்ச்சியில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி, சமீபத்தில் பிரசாரத்தின் போது சுடப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து டிசம்பர் பாதியிலிருந்து நாடு முழுவதும் வன்முறை மீண்டும் வெடித்தது. இந்த வன்முறை கும்பலின் தாக்குதலில் இதுவரை 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், டாக்காவின் வடக்கு பகுதி தன்னார்வலர் பிரிவின் முன்னாள் பொதுச்செயலாளரான முசாபீர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இடைக்கால அரசு திணறி வருகிறது.

