தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன.
அந்த வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குகிறார்கள்.சென்னையை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ளது. இதற்கு போலீஸாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்க இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்களுக்கு இ-மெயில் மூலம் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது.
குறிப்பாக, போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டும்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்களை உடனுக்குடன் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

