திருப்பூரை சேர்ந்தவர் முருகன் (53). இவர் மாநகராட்சியில் உள்ள நல்லுார், மூன்றாவது மண்டலத்தில் ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தார். தற்போது முடிக்கப்பட்ட பணி மற்றும் நடக்கும் பணிகளுக்கான, மூன்று பில்களை பரிசீலனை செய்ய, மூன்றாவது மண்டல இளநிலை பொறியாளர் சுப்ரமணியனிடம் (52) கொண்டு சென்றார். இந்த பில்களை ‘பாஸ்’ செய்ய, ஒப்பந்ததாரர் முருகனிடம், 8.40 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டார். முதல் கட்டமாக, ஐந்து லட்சம் ரூபாய் தருமாறும் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஒப்பந்ததாரர் முருகன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனைப்படி ஐந்து லட்சம் ரூபாயை இளம்நிலை பொறியாளரிடம் வழங்கிய போது, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
