தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக உள்ளது.
பிரதான கட்சி தலைவர்கள் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க கூட்டணியை வெற்றி பெற வைக்க கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்
இதேபோல், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்திற்கு வருகை புரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் கொளத்தூரில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், ஏப்ரல் 21-ஆம் தேதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்த நிலையில், ராகுல் காந்தி ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
