உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, இந்திய அரசுடன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி, மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இளைஞர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த வீடியோ திடீரென தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவே நீக்கப்பட்ட இந்தச் சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்தின் தலைவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பு விடுத்தது. இதனிடையே, மெட்டா தரப்பிடம் விளக்கம் கோரிய நாடாளுமன்றக் குழு, சமூக வலைத்தள நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மெட்டா தலைவர் மன்னிப்பு கோரி பதிலளிக்க வேண்டும் என்றும் மூன்று நாட்கள் கெடு விதித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ‘சேஃப் ஹார்பர்’ எனப்படும் சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஒன்றிய அரசு அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, தொழில்நுட்பப் பிழை காரணமாக அந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாகவும், பின்னர் உடனடியாக மீண்டும் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், இந்திய அரசிடம் வருத்தம் தெரிவித்ததுடன், நிறுவனத்தின் செயல்பாட்டு பிழைகள் தொடர்பாக மன்னிப்பும் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்த மன்னிப்பு பிரதமரின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்துக்கு மட்டுமல்லாமல், டீப்ஃபேக் வீடியோக்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கக் கட்டுப்பாட்டு பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
ஒரு வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட இந்தச் சம்பவம், இந்திய அரசு மற்றும் மெட்டா இடையேயான உறவை மீண்டும் சோதனைக்குள்ளாக்கியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களின் பொறுப்புணர்வு, உள்ளடக்கக் கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் தளங்களின் செயல்பாடு குறித்து மீண்டும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
