திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 29-ந்தேதி டில்லியில் மாநாடு நடத்தின. இதில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைப் பாதிக்கின்ற மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்தும், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்களை (எஃப்.டி.ஏ.எஸ்) ரத்து செய்ய வேண்டும், கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி
வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்வது என்றும், மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவாக ஆகஸ்ட் 10-ந்தேதி நாடு முழுவதும் ஆயிரம் மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என டெல்லி மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10-ந்தேதி அன்று மத்திய அரசு அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் ராஜு, மெடிக்கல் செல்வராஜ், சந்திரசேகர், லெனின், ரமேஷ், அருள்தாஸ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
