நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, அதிலிருந்து சுமார் ரூ.11 லட்சத்தை ஆன்லைன் மூலமாகத் திருடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகத் தனியார் வங்கிக் கணக்குகள் மற்றும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அரசு அலுவலகத்தின் வங்கிக் கணக்கையே ஹேக் செய்து பணம் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கும்பல் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் மூன்று மாவட்டங்களில் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திலும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒட்டுமொத்தமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதிக எண்ணிக்கையிலான ஊராட்சிகளைக் கொண்ட முக்கியமான வட்டார வளர்ச்சி அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது. விவசாய நிலப்பரப்பும், விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள இந்தப் பகுதியில், அரசு நிர்வாகத்தின் முக்கிய வங்கிக் கணக்கிலேயே பணம் திருடப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் வங்கிக் கணக்குகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டது யார்? அரசு வங்கிக் கணக்குகளின் விவரங்களை எவ்வாறு மர்ம நபர்கள் பெற்றனர்? எந்தெந்த மாவட்டங்களில் அரசு நிதி குறிவைக்கப்பட்டுள்ளது? திருடப்பட்ட ரூ.11 லட்சத்தை மீட்க முடியுமா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும். அரசு அலுவலகத்தின் வங்கிக் கணக்கையே குறிவைத்து நடைபெற்றுள்ள இந்த ஆன்லைன் பண மோசடி சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
