இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான சந்திப்பின்போது மத்திய கிழக்கு போர் விவகாரம் குறித்தும், சிவில் அணுசக்தித் துறையில் இந்தியா – ரஷ்யா ஒத்துழைப்பை மேம்படுத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போரினால் ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய துணைப் பிரதமர் டெனில் மான்ட்ரூவ், பிரதமர் மோடி, வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது, இந்திய சந்தைக்குத் தேவையான திரவ வடிவ இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றை கூடுதலாக விநியோகிக்க தங்கள் நாட்டு நிறுவனங்களால் முடியும் என ரஷ்ய துணை பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவுக்கான உர ஏற்றுமதியை 40 சதவீதம் வரை அதிகரித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் இந்திய தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

