பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில்
கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் 1,03,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் 97,593 வாக்குகள் பெற்றிருந்தார். சிவசங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராமச்சந்திரனை விட 6,329 வாக்குகள் பெற்று, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடை பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியும் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்திடம் மைக் சின்னம் பெற்றிருந்தாலும், தற்பொழுது குன்னம் சட்டமன்ற தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறது. இக்கட்சியின் வேட்பாளராக குன்னம் சட்டமன்றத் தொகுதி ஐஜேகே பொறுப்பாளரான அன்பழகனின் மனைவி சரண்யா அன்பழகன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த், செந்தில் ஆகியோர் இணைந்து பெண் பார்க்க செல்லும் பொழுது, எதிரே வருபவர்களிடம் ரஜினிகாந்த், மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது என்று கூறும் காமெடி, எப்பொழுதும் நகைச்சுவையாகவும் அதிகம் பேசு பொருளாகவும் கருதப்படுகிறது.
இதுபோன்று தற்பொழுது அதிமுக கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி குன்னம் சட்டமன்ற தொகுதிகள் போட்டியிட்டாலும், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிடாமல், அவர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது, ரஜினிகாந்த் பேசும் காமெடி வசனத்தை போன்று, மணப்பெண் இவர்தான், ஆனால் அணிந்திருக்கும் பட்டு புடவை என்னுடைய து என்பது போன்று வேட்பாளர் ஐ.ஜே.கே, ஆனால் சின்னம் அதிமுகவின் இரட்டை இலை என்று குன்னம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதனால் கடந்த முறை 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தற்போதைய போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தற்பொழுது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற கருத்தும் குன்னம் சட்டமன்ற தொகுதிகள் எதிரொலிக்கிறது.

