கொரோனா நேரத்தில் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் பென்னிக்ஸ் ஜெயராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர்களை போலீசார் அடித்தே கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவும், கடைகளை திறக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பெனிக்ஸ் (31) ஆகியோர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். விசாரணைக்காக அழைத்து சென்று கொலை
இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறி பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு ரோந்து வந்த போலீசார் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்கள். இதையடுத்து தந்தை பெனிக்ஸ்-சும் அன்று இரவே காவல் நிலையம் சென்றார். அப்போது அவரையும் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்துவதாக கூறி அடித்து தாக்கியுள்ளனர். இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மறுநாள் ஜூன் 20 ஆம் தேதி அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெனிக்ஸ் 22 ஆம் தேதி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறு நாள் 23 ஆம் தேதி அதிகாலை ஜெயராஜூம் உயிரிழந்தார்.
