ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழி, கலாச்சார திணிப்பு எந்தவிதத்தில் நடந்தாலும் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்ப்பார்கள். மும்மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை, இந்தியை திணிப்போம் என்று தமிழ் மண்ணில் தர்மேந்திர பிரதான் சொல்ல தயாரா? மாணவர்கள் அனைவரும் 3 மொழிகளை கற்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் களத்தில் பிரதான் பேச தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளதாவது; “தங்களின் கருத்துக்கள் மிகவும் பொறுப்பற்றவை மற்றும் அலட்சியமானவை; இவை இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி விழுமியங்கள் மற்றும் மாநிலங்களின் மீதான மரியாதையைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதையே பிரதிபலிக்கின்றன. தமிழ்நாடு மூன்றுமொழி கொள்கையை (Three Language Policy) வன்மையாக நிராகரிக்கிறது. இது ஏதோ ஒரு மொழிக்கு எதிரான போராட்டம் அல்ல; இது திணிப்பிற்கு எதிரான மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். நாடாளுமன்றத்தில் தமிழர்களைப் பற்றித் தாங்கள் முன்னதாகப் பேசிய இழிவான கருத்துக்களும், அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்ட காலங்கடந்த மன்னிப்பும் உங்கள் செயல்பாட்டு முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
“இந்தி திணிப்பு இல்லை” என்ற வாதம் முற்றிலும் நேர்மையற்றது. ஒரு கொள்கையானது, தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களை ஒரு மூன்றாவது மொழியை ஏற்குமாறு மறைமுகமாக வற்புறுத்தும் போதும், கல்விக்கான முக்கிய நிதி ஒதுக்கீட்டை அக்கொள்கையுடன் பிணைக்கும் போதும், அது ஒரு தேர்வாக இருக்க முடியாது.
‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் வர வேண்டிய ரூ.2,200 கோடி என்ற பிரம்மாண்டமான தொகையை, தமிழ்நாடு இந்திதிணிப்பை ஏற்க மறுப்பதற்குக் கூலியாக சட்டவிரோதமாக நிறுத்தி வைத்திருப்பது அப்பட்டமான துணிச்சலாகும். இவை ஏதோ தானமாக வழங்கப்படும் நிதி அல்ல; வரிப் பணம் மூலம் திரட்டப்பட்ட, தமிழ்நாட்டு மக்களுக்குச் சேர வேண்டிய உரிமையுள்ள நிதி. இதை ஒரு மிரட்டல் கருவியாகப் பயன்படுத்த முடியாது.
ஒன்றைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நெகிழ்வுத்தன்மை என்ற போர்வையிலோ, நிதி நெருக்கடி மூலமாகவோ அல்லது தேச நலன் என்ற பெயரிலோ முன்னெடுக்கப்படும் எந்தவொரு மொழித் திணிப்பையும் தமிழ்நாடு எக்காலத்திலும் ஏற்காது. இக்கொள்கை மாணவர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவதோடு, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது; மேலும் இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையைச் சிதைத்து, “ஒரே இந்தியா” என்ற பெயரில் ஒருமித்த (Monochromatic) தன்மையை உருவாக்க முயல்கிறது.
வீணான சொல்லாடல்களுக்கு இடையே, அடிப்படையான சில கேள்விகளைத் தாங்கள் தவிர்க்கக் கூடாது:
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உண்மையில் எந்த மூன்றாவது இந்திய மொழி நடைமுறைப்படுத்தப்படுகிறது?
வட இந்தியாவில் உள்ள எத்தனை PM SHRI பள்ளிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளும், பெங்காலி, ஒடியா மற்றும் மராத்தி போன்ற மொழிகளும் உண்மையாகக் கற்பிக்கப்படுகின்றன?
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) கீழ் இயங்கும் எத்தனை பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்ற செம்மொழிகளுக்காக உங்கள் அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் வெளியிடத் தயாரா?
தமிழ்நாட்டில் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற உங்கள் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியான முதலீடு, அதிக மாணவர் சேர்க்கை, சிறந்த கற்றல் முடிவுகள் மற்றும் முன்னோடி நலத்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வலிமையான பொதுக் கல்வி முறைகளில் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தித் திணிப்பிற்கு எதிரான எங்களது எதிர்ப்பு அச்சத்தால் உருவானது அல்ல. எங்கள் தாய்மொழித் தமிழ் ஒருபோதும் பலவீனமடையாது. தமிழும் தமிழர்களும் எல்லா வகையான திணிப்புகளையும், கலாச்சார ஊடுருவல்களையும் கடந்து நிலைத்து நிற்பார்கள். இது எங்களின் கொள்கை, கண்ணியம் மற்றும் இந்தியாவின் உண்மையான பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான விஷயம்.
சமூக ஒருமித்த கருத்து மற்றும் சிறந்த கல்வி விளைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எங்களது இருமொழிக் கொள்கையை, பன்முகத்தன்மையைக் குலைக்கும் ஒரு மத்தியத்துவக் கொள்கைக்காகத் தமிழ்நாடு ஒருபோதும் கைவிடாது. தமிழர்கள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி என உலக அளவில் முத்திரை பதிப்பதற்குக் காரணமாக இருப்பது எங்களது மொழிக் கொள்கையே. கல்வித் துறையில் எந்தத் தரவுகளும் இல்லாமல் நீங்கள் வெறும் வார்த்தை ஜாலங்களை வீசுகிறீர்கள், ஆனால் எங்கள் வாதங்களை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்.
தமிழ்நாட்டுப் பள்ளிகள் நவீன கல்வியில் பின்தங்கியுள்ளன எனக் கூறுவது தவறானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. சேர்க்கை விகிதம், கற்றல் திறன் மற்றும் கண்டுபிடிப்புகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உள்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்; 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். திமுகதேர்தல்அறிக்கை2026-ல் இத்திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும்” என்ற இந்த அறிவிப்பை, தமிழ்நாட்டு மண்ணில் நின்று, மக்களிடம் வாக்கு கேட்கும் போது சொல்லத் தயாரா என நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளும் தங்களின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவின் இந்தத் தீவிரமான மூன்று மொழித் திணிப்பை அவர்கள் ஆதரிக்கிறார்களா?
பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுடன் நிற்கிறாரா அல்லது கொள்கை என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கத் துடிக்கும் டெல்லி எஜமானர்களுடன் நிற்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது” என தெரிவித்துள்ளார்.

