Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

6 ஆண்டுக்கு பிறகு நீராவி இன்ஜினில் மலை ரயில் இயக்கம்

குன்னூர் : ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஜெர்மனி நாட்டு பயணிகள் உற்சாகப் பயணம் மேற்கொண்டனர்.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலின் பாரம்பரியத்தை ரசிப்பதற்கும், அதன் சிறப்புகளை படம் பிடிப்பதற்கும் வெளிநாட்டுப் பயணிகள் காட்டும் ஆர்வம் தொடர்கிறது.

அந்த வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மலை ரயில் ஆர்வலர்கள் 5 பேர் இந்திய ரயில்வே வாரியத்தின் சிறப்பு அனுமதி பெற்று, 3 நாளுக்கு சுமார் ரூ.12 லட்சத்து 78 ஆயிரம் கட்டணத்தில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து தனிப்பயணம் மேற்கொண்டனர்.

வழக்கமாக குன்னூர்-ஊட்டி இடையே டீசல் இன்ஜின்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், இந்தச் சிறப்புப் பயணத்திற்காக 6 ஆண்டுகளுக்குப் பிறகு ‘எக்ஸ் கிளாஸ்’ நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே பயணம் செய்த இந்தக் குழுவினர், நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்குத் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.

இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தைப் படம்பிடிக்க வந்த இவர்கள் வெலிங்டன், அருவங்காடு, கேத்தி போன்ற ரம்மியமான ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். ​இந்தச் சிறப்பு ரயிலில் பயணித்த ஜெர்மனி நாட்டு பயணிகளின் கூடுதல் வசதிகளுக்காக, இன்ஜினுடன் 2 பெட்டிகள் கூடுதலாக ஒரு சரக்கு பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இவர்களது பாதுகாப்பிற்காக 4 பிரேக்ஸ் மேன்கள், 2 என்ஜின் டிரைவர்கள், மெக்கானிக் மற்றும் சிலிகுறியை சேர்ந்த சுற்றுலா மேலாளர் ஆகியோர் உடன் சென்றனர்.

இந்தக் குழுவினர் உலகம் முழுவதும் பயணம் செய்து ரயில்வே பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்காகவே இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மேலாளர் கிருஷ்ணகாந்த் தெரிவித்தார்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயிலில் வெளிநாட்டவர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டி வருவது, நீலகிரி சுற்றுலாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

error: Content is protected !!