கரூர், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக பிரமுகர் தனபால் ஆகிய இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆண்டாங்கோவில் மந்தை அருகில் உள்ள அதிமுக பிரமுகர் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆற்று மணலை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த

பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு ஆற்று மணலை பறிமுதல் செய்ய வந்த

வாகனங்களை உள்ளே அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து அனுமதி இன்றி கொட்டி வைக்கப்பட்டதாக கூறப்படும் ஆற்று மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
குறிப்பாக நேற்று முன்தினம் கரூர் மாவட்டம், நெரூர் அருகே மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை சிறைபிடித்த சம்பவத்தை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கொட்டி வைக்கப்பட்டதாக விஏஓ அளித்த புகாரின் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

