Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும்

போதைப்பொருட்கள் இல்லா சமுதாயத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும்

போதை கலாச்சாரத்திற்கு உள்ளாகாமல் வலுவான இளைய சமுதாயமாக உருவாக மாணவ மாணவிகள் உறுதி எடுக்க வேண்டும் என்று திருச்சி கல்லூரி விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கூறினார்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர் பேரவையினர் பதவியேற்பு விழா, அனைத்து மன்றங்களின் செயல்பாட்டுத் தொடக்க விழா, புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் நிகழ்வை தொடங்கி வைத்தார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர்தம் உரையில், கல்லூரியில் படித்த நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த வயதுதான் சாதிப்பதற்கான வயது. மனதை எந்த அழுத்தத்திற்கும் உள்ளாக்காமல் கிடைக்கிற வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை அடையாளப்படுத்தவும் கற்றுக் கொள்ளவும் இந்த நாள்களே உங்களுக்கு கிடைத்துள்ள வரம். பல்வேறு பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வந்துள்ள நீங்கள் சாதி, சமய வேறுபாடின்றி போதைக் கலாச்சாரத்திற்கு உள்ளாகாமல் வலுவான இளைய சமுதாயமாக உருவாக உறுதி எடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும், திரைப்பட நடிகருமான திருச்சி சரவணக்குமார் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி கலைத்துறையில் சாதிக்க உற்சாகப்படுத்தினார். கல்லூரி நுண்கலைக் குழுவினர் சார்பாக மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், நாடகம், பாடல் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

முன்னதாக துணை முதல்வர் அருள்முனைவர் அருள்ஒளி வரவேற்புரை வழங்கினார். நிறைவில் மாணவர் பேரவைத் தலைவர் ஸ்ரீதர் நன்றியுரை கூறினார். நிகழ்வுகளை பேராசிரியர்கள் ஜோஸ்பின், மேரி மார்கிரேட் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுண்கலை மன்ற ஆலோசகர் அருள்முனைவர் அருள் ஒளி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் கா.ஜான் கென்னடி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

error: Content is protected !!