காரில் ரேஷ் டிரைவிங் செய்து தான் பார்த்து இருப்பீங்க…. ஆனால் பேருந்தில் இப்படி ஒரு ஆபத்தான ரேஷ் டிரைவிங்கா…
கோவையில் என்.ஜே.கே தனியார் பேருந்து அதிவேக ரேஷ் டிரைவிங்: அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல்!
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாகத் தனியார் பேருந்துகள் இடையே நிலவும் கடுமையான நேரப் போட்டி காரணமாக, பேருந்துகளை அதிவேகமாக இயக்குவதும், ஆபத்தான முறையில் முந்திச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
அத்துடன், தடை செய்யப்பட்ட உரத்த ஏர் ஹார்ன்களைப் (Air Horns) பயன்படுத்தி அதிக ஒலி எழுப்புவதால், மற்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ‘என்.ஜே.கே’ (NJK) என்ற தனியார் பேருந்து, அதிக ஒலி எழுப்பியபடி சக வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகச் சென்று உள்ளது.
இதனைப் பின்னால் காரில் வந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அதில், “காரில் ரேஷ் டிரைவிங் செய்து தான் பார்த்து இருக்கிறேன், ஆனால் பேருந்தில் இப்படி ஒரு ஆபத்தான ரேஷ் டிரைவிங்கை இப்ப தான் பார்க்கிறேன்… ஏர் ஹார்ன் அடிச்சு காதே வலிக்குது!” என்று அவர் ஆதங்கத்துடன் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போக்குவரத்து காவல்துறையினரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் (RTO) தொடர்ந்து சோதனைகள் நடத்தி ஏர் ஹார்ன்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வந்தாலும், தனியார் பேருந்துகள் மீண்டும் அவற்றைப் பொருத்திப் பயன்படுத்துவது குறையவில்லை.
லாப நோக்கத்திற்காகவும் நேரப் போட்டிக்காகவும் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
