நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நேரடியாகக் களமிறங்க CSI சென்னைப் பேராயம் முடிவு செய்துள்ளது. சென்னை, ராணிப்பேட்டை,கடலூர் உள்ளிட்ட பேராய மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் இதற்கான பிரசாரப் பணிகளை முன்னெடுக்க பேராயம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆயர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சபை உறுப்பினர்கள் தேவாலயங்கள் மற்றும் பொதுமக்களிடையே துண்டறிக்கைகள் மூலம்

வாக்கு சேகரிக்க உள்ளனர்.
அந்தத் துண்டறிக்கையில், நடிகர் விஜய்க்கும் பாஜகவுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாஜகவிற்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் விஜயுடன் கூட்டணி அமைப்போம் என ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதாலேயே, விஜய்

பாஜகவை எதிர்த்துப் பேசுவதில்லை என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போல மத்திய அரசு கொண்டு வந்துள்ள எஃப்சிஆர்ஏ மசோதா குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், விஜய் மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காமல் சினிமா பிம்பத்தை வைத்து வாக்குச் சேகரிப்பதாகவும், அவரது வேட்பாளர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பின்னணி கொண்டவர்கள் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. திரை பிம்பம் வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக திருச்சபை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
