Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தா.பழூர் டாஸ்மாக் கடை முற்றுகை!

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுபானங்கள் ஏற்றி வந்த வாகனத்தை கடைக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு அருகில் 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் அரசு மாணவியர் விடுதி, அரசு மேல்நிலைப் பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன.

இதன் காரணமாக, தமிழக அரசு மூட அறிவித்த 717 டாஸ்மாக் கடைகளில் இந்த பிரச்சினைக்குரிய தா.பழூர் டாஸ்மாக் கடையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், 28ஆம் தேதிக்குள் கடை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு மதுபானங்களை இறக்குவதற்காக லாரி ஒன்று வந்தது. இதை அறிந்த அருகிலுள்ள தோப்புத்தெருவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “28ஆம் தேதியுடன் கடையை மூடுவதாக கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மதுபானங்களை கொண்டு வருவது எந்த விதத்தில் நியாயம்? உடனடியாக கடையை மூடவில்லை என்றால் நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று பெண்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து மதுபானங்களை ஏற்றி வந்த லாரி, டாஸ்மாக் கடையில் சரக்குகளை இறக்காமல் திரும்பிச் சென்றது.

error: Content is protected !!