Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

த.வெ.க. எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்தார் – சொந்த வேட்பாளர் அம்பலம்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று ஓமலூரில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையோடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 7தொகுதிகளிலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 4தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் வீரபாண்டி தொகுதிகள் இதில் அடங்கும்.

சேலம் மேற்கு தொகுதியில் முன்னாள் இன்ஸ்பெக்டரும், தற்போதைய ரியல் எஸ்டேட் அதிபருமான லட்சுமணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரசாரத்திற்கு பணம் கொடுத்து படை திரட்டிய லட்சுமணன், தேர்தல் நாளில் ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் பணம் கொடுத்தார், தொகுதி முழுவதும் பரவலாக பரிசுப்பொருட்களை வழங்கினார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நாங்கள் தூயசக்திகள், ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று தவெக நிர்வாகிகள் தம்பட்டம் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் ஓமலூர் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய அதியமான், மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு லட்சுமணன் பணம் கொடுத்தார் என்று பேசி, உண்மையை உடைத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அதியமான். இவர் சமீபத்தில் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் நமக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிதான். அங்கு தவெக சார்பில் போட்டியிட்ட லட்சுமணன், வாக்காளர்கள் அனைவருக்கும் தலா ரூ.2ஆயிரம் பணம் கொடுத்தார். இந்தத் தகவல் நமது ஓமலூர் தொகுதி மக்களிடமும் பரவியதால், நமக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நமக்கு வரவேண்டிய 6,000 முதல் 10,000 வாக்குகள் வரை நம்மை விட்டு கைநழுவிப் போனது,’’ என்று தெரிவித்தார். இவ்வாறு அதியமான் பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், நடந்து முடிந்த தேர்தலில் நமது கட்சியினர் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்காமல் நேர்மையாகப் போட்டியிட்டு வென்றனர் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டிருந்தார். தலைவர் பணம் கொடுக்கவில்லை என்று மார்தட்டிச் சொன்ன நிலையில், அவரது சொந்தக் கட்சியின் வேட்பாளரே, பக்கத்துத் தொகுதி வேட்பாளர் வாக்குக்கு ரூ.2ஆயிரம் கொடுத்ததாகப் பகிரங்கமாக கூறியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது தன் மீதுள்ள குற்றவழக்குகளை மறைத்துத் தகவல் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சொந்தக் கட்சி வேட்பாளரே தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்குப் பெருந்தொகை விநியோகம் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டு பேசியுள்ளதால், இந்தத் தேர்தல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!