இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சிற்குச் சாதகமாக இருக்கும் எனக் கணித்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களம் புகுந்த இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. அதிரடித் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, ரன் ஏதுமின்றி ‘டக் அவுட்’ ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அனுபவ வீரர் இஷான் கிஷான் நிதானமாக ஆட முயன்றார், ஆனால் அமெரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 25 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஷிவம் துபே, வந்த வேகத்திலேயே ரன் ஏதுமின்றி வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
தற்போது இந்திய அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து, ரன் ரேட் மிகவும் குறைந்த நிலையில் தடுமாறி வருகிறது. கத்துக்குட்டி அணியாகக் கருதப்படும் அமெரிக்கா, நடப்பு சாம்பியனான இந்தியாவிற்குப் பந்துவீச்சில் கடும் சவாலை அளித்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

