அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரமக்குடி, சாத்தூர், பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி தொதிகளும், மேற்கு மண்டலத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளும் பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி தொகுதிகளும், தென்மாவட்டங்களில் குமரி, குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், நெல்லை, மதுரை வடக்கு தொகுதிகளுக்கு பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ள 15 தொகுதிகளின் பட்டியலையும் அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் கொடுத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

