Skip to content

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர் சீனிவாசபுரம், செக்கடி பகுதியை சேர்ந்த சின்னப்பாண்டி என்பவரின் மனைவி சரஸ்வதி (38) ஆகிய இருவரும் கை வளையல் மற்றும் கைச்செயின் ஆகியவற்றை அடமானம் வைத்துள்ளனர்.

இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் இதே நிதி நிறுவனத்தில் இதேபோல் கை வளையல் மற்றும் கைச் செயினை பலமுறை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அதே போன்று கைச்செயின், வளையல் ஆகியவற்றை அடமானம் வைக்க வந்ததால் நிதி நிறுவன அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன் என்பவர் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே இவர்கள் அடமானம் வைத்த நகைகளை ஆடிட்டிங் பிரிவிற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நகைகளில் ஹால்மார்க் முத்திரையும் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆடிட்டிங் பிரிவில் தீவிர சோதனை செய்தபோது வெள்ளி நகைகளுக்கு தங்கம் முலாம் பூசியது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் தகவல் அறிந்து தனியார் நிதி நிறுவனத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் எஸ்ஐ ராஜ்கமல் மற்றும் போலீசார் திவ்யா சரஸ்வதி இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்களிடம் போலி நகைகளை அடமானம் வைக்க கொடுத்தது தஞ்சாவூர் கீழவாசல், கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மணிவண்ணன் (37) என்பது தெரியவந்தது.

பின்னர் மணிவண்ணனின் தொலைபேசி எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்ட பொழுது தஞ்சை பகுதியில் மறைந்திருந்த மணிவண்ணன் சிக்கிக்கொண்டார். அவரை பிடித்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இதுபோன்ற போலி நகைகளை வாங்கி வந்து அடமானம் வைத்து மணிவண்ணன் இதுவரை ரூ.16.31 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து தனியார் நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணன் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி கவிதா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் வேறு நிதி நிறுவனங்களில் இதுபோன்று போலி நகைகளை அடமானம் வைத்து பணம் மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

error: Content is protected !!