மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.இதேபோல் அந்த கட்சியின் பாராளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், விலகலுக்கான காரணம் குறித்து அவர் அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை. கட்சித் தலைமை மீதான அதிருப்தியே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இவர் அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சந்தோஷ் மோகன் தேவின் மகள் ஆவார். 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், தற்போது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகிய பிறகு, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்தார். இதனால் அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 2-வது மாநிலங்களவை எம்.பி. சுஷ்மிதா தேவ் ஆவார். இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை சுகேந்து சேகர் ராய் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
