சேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13-ந்தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும், பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

