Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல்துறைக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறைக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை; முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணை கட்ட தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு அளிக்கவில்லை; தமிழக மக்களின் நலனே முக்கியம் என்றும் பேட்டி

திருச்சி: தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. தீபாவளி தினத்தன்று தேனியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள்?

காவல்துறையில் பணியாற்றும் தலைமைக்காவலர் முதல் எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். இதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி நாளில் மட்டும் தமிழகத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆறு மாதங்களில் 40 முதல் 50-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொறுப்பான அமைச்சர்கள் அலட்சியமாகப் பேசுவது ஏற்புடையதல்ல என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பேசிய அவர், மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருச்சியில் மனு அளிக்கச் சென்ற நபர் மீது துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகார் குறித்தும் அவர் பேசினார். புகார் அளித்தவரை காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றதாகவும், பின்னர் அவர் தனது கருத்தை மாற்றிப் பேசியதாகவும் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேகதாது அணை விவகாரம்

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கு பாஜக தலைவர்கள் முழு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர்கள் யாரும் மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றார்.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாஜகவின் நிலைப்பாடு எதிரானது. கர்நாடகத்தில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு. தமிழக மக்களின் நலனும், தமிழகத்தின் நீராதார உரிமைகளும் முக்கியம். பாஜக தலைவர்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறுபவர்கள், எந்தத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்பதைப் பெயருடன் குறிப்பிட வேண்டும் என்றார்.

புத்தகக் கொள்முதலில் முறைகேடு புகார்

நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்துப் பேசிய அவர், பதிப்பகங்களின் முகவரிகள், நூலாசிரியர்களின் விவரங்கள், புத்தகங்களின் உண்மைத்தன்மை ஆகியவை முறையாகச் சரிபார்க்கப்பட வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, புனைப்பெயர்களில் வெளியிடப்பட்டதாகவும், அவற்றுக்காக அரசு நிதி செலவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாகத் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

error: Content is protected !!