Skip to content

வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?

வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிப்புகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது. இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் மற்றும் கனிமங்களை அபகரிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ தேசிய பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அண்டை நாடான கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, “கராகஸ் மீது ஏவுகணைகள் வீசப்படுகிறது” என்று கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபோர்ட் டியூனா ராணுவ தளம், லா கார்லோட்டா விமான தளம் உள்ளிட்ட இடங்களில் நடந்ததாகத் தெரிகிறது. மிராண்டா, அராகுவா, லா குவைரா மாநிலங்களிலும் வெடிப்புகள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஊடகங்கள் அதிபர் டிரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகவும், மதுரோவைப் பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளன.

ஆனால் வெனிசுலா அரசு இதை உறுதிப்படுத்தவில்லை.இந்தத் தாக்குதல் வெனிசுலாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதுரோ அரசுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகால அழுத்தத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் மதுரோவை போதைப்பொருள் கார்டல் தலைவராகக் குற்றம்சாட்டி வருகிறது. இது லத்தீன் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சமூகம் இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று வெனிசுலா அரசு கோரியுள்ளது.இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறியது என்று பல நாடுகள் விமர்சித்துள்ளன. வெனிசுலா மக்கள் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் விளைவுகள் குறித்து உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

error: Content is protected !!