தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த மாணவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கிப் பயணமானார்கள்.
பள்ளி வாகனம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், உயிரிழந்த மாணவர் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டியைச் சேர்ந்த நரேன்குமார் (15) என்பது தெரியவந்தது. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வாகனம் ஓடும்போது மாணவர் எப்படி விழுந்தார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் மாணவன் உயிரிழந்தது, அவருடன் சென்ற சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

