ஏழாயிரம்பண்ணை அருகே, கோயில் திருவிழாவுக்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கல்குவாரி நீரில் மூழ்கி இறந்த சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் உள்ள ஆலா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரகுப்தன் மகன் சிவன் (22), சுப்ரமணியன் மகன் சஞ்சய் (17). இருவரும், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்தனர். நேற்று மாலை இருவரும் நண்பர்களுடன் சாத்தூர்-ஏழாயிரம்பண்ணை சாலையில், கீழச்செல்லையாபுரம் அருகில் உள்ள கல்குவாரி நீரில் குளிக்கச் சென்றனர்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது சிவன், சஞ்சய் திடீரென நீரில் மூழ்கினர். அவர்களை காப்பற்ற நண்பர்கள் முயன்றும் முடியால் போனது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மாலை 4 மணியளவில் இருவரையும் தேடத் தொடங்கினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சாத்தூரில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
6 மணி நேர தேடுதலுக்கு பிறகு இரவு 10 மணி அளவில் பாறை இடுக்குகளில் சிக்கி இறந்த நிலையில் கிடந்த சிவன், சஞ்சய் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
