உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்பஹேரியா பகுதியில், பயிற்சி விமானம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நெடுஞ்சாலை அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானம் வேகமாக கீழிறங்கிய நிலையில், அங்கிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதி, அருகிலிருந்த வயலில் விழுந்து நொறுங்கியது. பெரும் சத்தத்துடன் விமானம் கீழே விழுந்ததால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் விமானி கைனாத் பலத்த காயமடைந்தார். மீட்புப் படையினரும் காவல்துறையினரும் அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முறையான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
