தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்களின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில், ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் தனிப்படையினர் இன்று (04.04.2026) மாலை 4:30 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நடைமேடை எண் 5-ல் நின்றிருந்த புவனேஸ்வர் – ராமேஸ்வரம் விரைவு ரயிலின் (வண்டி எண்: 20849) பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ட்ராலி சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தச் சூட்கேஸைத் திறந்து சோதனையிட்டபோது, அதில் தலா 2 கிலோ எடையுள்ள 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முறையாக மீட்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காகத் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவிடம் (NIB) ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

